சந்தோஷ் காளி வழக்கில் தேடப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது

சந்தோஷ் காளி வழக்கில் தேடப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது
X

கைது செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்.

சந்தோஷ் காளி வழக்கில் தேடப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மீது கடந்த சில நாட்களாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. அவரும் அவரது ஆதரவாளர்களும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.

மேலும், அவர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க போலீசார் இதுவரை திரிணமுல் கட்சியைச் சேர்ந்த 2 இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான ஷாஜகான் ஷேக் தலைமறைவானர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் பலரும் சாடினர். இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி விளக்கம் தர வேண்டும் எனத் தேசிய பழங்குடியின ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கிடையே சுமார் 55 நாட்களாகத் தலைமறைவாக இருக்கும் அவரை மேற்கு வங்க போலீசார் ஒரு வழியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னர், அவர் பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நடமாட்டத்தைப் பல நாட்கள் கண்காணித்த பிறகே அவரை கைது செய்ததாக மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சந்தேஷ்காலி வழக்கில் ஷேக் ஷாஜகானை சேர்க்கக் கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக நீதிபதி, "அவரைக் கைது செய்யாமல் இருக்க எந்த காரணமும் இல்லை..சந்தேஷ்காலி வழக்குகளில் எந்தவொரு தடையும் விதிக்க முடியாது. ஷேக் ஷாஜகான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணாமுல் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கிற்கு எதிராக மாநிலத்தில் பல இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. சந்தேஷ்காலியில் உள்ள ஏராளமான பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த 2019இல் 3 பாஜகவினர் கொல்லப்பட்டது உட்பட பல குற்ற வழக்குகளில் இவர் மீது ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் மற்றும் நில மோசடிகளில் பண மோசடி செய்ததாக ஷேக் ஷாஜகான் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றம் சாட்டியது. மேற்கு வங்கத்தில் மின் துறை ஊழியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், ஷேக் ஷாஜகான் மீதான இந்த குற்றச்சாட்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவே தரலாம்.

Tags

Next Story
ai in future agriculture