‘திருச்சி தமிழகத்தின் தலைநகரமாக நிச்சயமாக மாறும்’ -அமைச்சர் துரைமுருகன்
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரை முருகனுக்கு வீரவாள் வழங்கப்பட்டது.
தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு வந்தார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க.வில் உள்ள அனைத்து அணி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு அணி நிர்வாகிகளுக்கு கருத்துரை வழங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் சேலம் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிக்கம்பத்தில் அமைச்சர் துரை முருகன் தி.மு.க. கொடி ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் இனிகோ இருதய ராஜ் எம்.எ.ல்ஏ. உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே புதிதாக கட்டப்பட்ட பாலம் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகளவு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை என நாங்கள் நிரூபிப்போம்.
திருச்சியை தமிழகத்தின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் .கூறி இருந்தார். அவரது கருத்து எனக்கு பிடித்து இருந்தது. அ.தி.மு.க. எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த கருத்து பிடித்தது. இதற்கு காரணம் திருச்சி தமிழகத்தின் மத்தியில் இருப்பது தான். இன்று அல்ல என்றாது ஒரு நாள் நிச்சயமாக திருச்சி தமிழகத்தின் தலைநகரமாக மாறும். அதனை செய்வதற்கு யாராவது ஒருவர் வருவார்.
அது போல் டெல்லி தமிழகத்தில் இருந்து மிக தூரத்தில் உள்ளது. நாட்டின் தலைநகர் ஐதராபாத்தில் நாட்டின் மைய பகுதியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். டெல்லி மிக தொலைவில் இருப்பதால் தான் அவர்கள் நமக்கு அந்நியமாக தெரிகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் துரை முருகன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu