திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம்

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம்
X

மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார் திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா. அருகில் ஸ்ரீரங்கத்தில் வீடு வீடாக வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம்.

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மாட்டு வண்டியில் சென்று பிரச்சாரம் செய்தார்.

திருச்சி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்திருப்பது பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம், கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும், முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருச்சி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் இவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிகாலை துவங்கி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாது. இரவு, பகலாக அவர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும், அவருக்கு ஆதரவாக அதிமுகவினர், கூட்டணி கட்சியினர், திரைப்பட நடிகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டோர் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய கருப்பையா, திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட கருமண்டபம், பொன்னகர், மிளகுப்பாறை, திருநகர், ஆா்எம்எஸ் காலனி, பிராட்டியூர், ராம்ஜி நகர், கண்டோன்மென்ட், பறவைகள் சாலை, ஸ்டேட் வங்கிக் காலனி, வில்லயம்ஸ் சாலை, மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளிட்ட 133 இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பல்வேறு இடங்களில் மாட்டு வண்டியை முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான சி.விஜயபாஸ்கர் ஓட்டி வர, அதில் இருந்தவாறு கருப்பையா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன், அமைப்புச் செயலர்கள் டி. ரத்தினவேல், எஸ். வளர்மதி, மாவட்ட துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், வணக்கம் சோமு, அதிமுக பகுதிக் கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல் ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான, கீழ உத்திர வீதியில், அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக நடிகையும், நட்சத்திர பேச்சாளருமான காயத்ரி ரகுராம் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், இரட்டை இலைக்கு வாக்களிக்க கோரி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உறவினர்கள் வீடு போல, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் உரிமையுடன் சென்று, அவர்களுடன் அமர்ந்து அதிமுகவின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறினார்.

அவரை கண்டதும் பொதுமக்கள் ஆர்வமுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் இண்டியா கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக அக்கட்டசியின் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர்களது பிரச்சாரத்தை விட அதிமுக வேட்பாளர் கருப்பையா நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil