திருச்சி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா: இரண்டாவது பட்டியல் வெளியீடு

திருச்சி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா:  இரண்டாவது பட்டியல் வெளியீடு
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி. கருப்பையா.

திருச்சி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா என எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரண்டாவது பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பி.கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் சேர்த்து 40 தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றே தொடங்கிவிட்டது.

இதனை தொடர்ந்து திமுக,திமுக ஆகிய முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். திமுக தான் போட்டியிட போகும் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும் நேற்று முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் 16 வேட்பாளர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை இன்று வெளியிட்டார். அதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பி. கருப்பையா அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம் ,திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. இதில் கந்தர்வ கோட்டையும், புதுக்கோட்டை தொகுதியும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவையாகும்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி. கருப்பையா புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பிகாம் பட்டதாரியான இவர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.

வேட்பாளர் கருப்பையா கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்தார். அப்போது முதல் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதா பிறந்த நாளின் போது மாவட்டம் முழுவதும் கல்வி மற்றும் சுகாதார பணிகள் தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும் அதிமுக நடத்திய பல போராட்டங்களிலும் பங்கேற்று உள்ளார் என கட்சி சார்பில் கூறப்பட்டு உள்ளது.

கருப்பையாவின் சொந்த ஊர் கறம்பக்குடி தாலுகா குழந்திரான் பட்டு என்ற கிராமம் ஆகும். இவரது மனைவி பெயர் விமலா. இந்த தம்பதியினருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் குருநாத் பன்னீர்செல்வம் என்ற மகனும், முதல் வகுப்பு படிக்கும் மகிபால் நன்னி என்ற மகளும் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் நேற்றைய நிலவரப்படி விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இன்று அதிமுக இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் திருச்சி இடம் பெற்று இருப்பதால் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் இளங்கோவன் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருநாவுக்கரசரை (காங்கிரஸ்) விட சுமார் நான்கரை லட்சம் வாக்குகள் குறைவாக வாங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக இந்த ஆண்டும் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டால் அதிமுகவினரிடையே சோர்வு ஏற்பட்டுவிடும் என்பதால் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா மிகவும் செல்வாக்கானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக திருச்சி அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்து உள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil