ஆட்சியாளர்களிடம் மறைமுக மோதலில் தலைமைச் செயலர் டெல்லிக்கு மாற்றம்

அமித்ஷா புதுச்சேரிக்கு வரவுள்ள சூழலில் ஆட்சியாளர்களிடம் மறைமுக மோதலில் இருந்த புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வரவுள்ள சூழலில் ஆட்சியாளர்களிடம் மறைமுக மோதலில் இருந்த புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலராக ராஜீவ்வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அஸ்வனிகுமார் பணியாற்றி வருகிறார். இவர் கேபினட், உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளை கவனித்து வந்தார்.
கடந்த ஆட்சி இறுதியில் அப்போதைய ஆளுநர் கிரண் பேடி- முதல்வர் ரங்கசாமிக்கு இடையில் கருத்து மோதல் நிலவியது. அப்போது தலைமைச் செயலர் மீதும் புகார்கள் எழுந்தன. அதையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. அப்போதும் ஆட்சியாளர்களுக்கும் தலைமைச் செயலருக்கும் இடையில் மோதல் ஏற்படத் தொடங்கியது. தலைமைச் செயலர் பல கோப்புகளுக்கு ஒப்புதல் தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததால் தலைமைச் செயலரை மாற்ற ஆட்சித்தலைமை தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தது. புதுச்சேரி தலைமைச் செயலாளரான அஸ்வனி குமாருக்கும் ஆட்சியாளர்கள் தரப்புக்கும் மறைமுகமாக மோதல் நீடித்து வந்தது. இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு வரவுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி தலைமைச் செயலாளர் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் பணியில் உள்ள ராஜீவ் வர்மா புதுச்சேரி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu