ஊருக்கு ஊர் பிரச்சினை: தி.மு.க. கோஷ்டிபூசல்களுக்கு தீர்வு தான் என்ன?

ஊருக்கு ஊர் பிரச்சினை: தி.மு.க. கோஷ்டிபூசல்களுக்கு தீர்வு தான் என்ன?
X

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்.

ஊருக்கு ஊர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் தி.மு.க. உட்கட்சி கோஷ்டிபூசல்களுக்கு தீர்வு தான் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசும்போது நான் உறக்கம் இன்றி தவிக்கிறேன். எனது முகத்தை பாருங்கள். மூத்த அமைச்சர்கள் கூட பொது வெளிகளில் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார்கள். இதனால் தினமும் காலையில் கண் விழிக்கும்போது இன்று என்ன பிரச்சினையை யார் உருவாக்கி இருக்கிறார்களோ என்ற அச்சத்திலேயே இருக்கிறேன். நமது வீட்டின் படுக்கை அறை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சமூக வலைத்தளங்கள் கேமரா போல் கண்காணிக்கிறார்கள். இதனை கழக முன்னணியினர் புரிந்து கொள்ளவேண்டும் என கூறி இருந்தார்.

அவரது இந்த பேச்சை உறுதி செய்வது போல் தி.மு.க. மூத்த அமைச்சர்கள் மற்றும் முன்னணி பிரமுகர்கள் அவ்வப்போது ஏதாவது பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது தி.மு.க.வில் திரும்பிய பக்கமெல்லாம் உட்கட்சி பஞ்சாயத்தும், கோஷ்டிப்பூசல்களும் அதிகரித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கட்சி பஞ்சாயத்து இப்போது ஊருக்கு ஒரு கோஷ்டிப் பூசல் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. குறிப்பாக நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் நிலவும் பனிப்போர் தான் முதலமைச்சர் ஸ்டாலினை நிம்மதி இழக்க வைத்துள்ளது. நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக கச்சைக் கட்டி நிற்பது தான் இப்போது ஹாட் டாபிக்.

அதேபோல் தேனியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் தங்க.தமிழ்ச்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணனுக்கு இடையே நடக்கும் ஈகோ யுத்தத்தால் கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமையன்று கூட தாமரைக்குளம் தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடியை சந்திக்க சேலம் புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க.வை பொறுத்தவரை மேயர் மகேஷ், அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் என மூன்று டீம்கள் முட்டி மோதி அரசியல் செய்கின்றன.

அதேபோல் விழுப்புரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை நிற்க வைத்து மறித்து கட்சிக்காரர்கள் கேள்வி கேட்ட நிகழ்வுகள் எல்லாம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களான பிரகாஷுக்கும், பர்கூர் மதியழகனுக்கும் எதிராக சத்தமின்றி ஒரு யுத்தத்தை தொடங்கியிருகிறார்கள் உடன் பிறப்புகள். ஒரு சிலர் கட்சியைவிட்டு வெளியேறி அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டார்கள்.

கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இதேபோல் தான் தென்காசி, வேலூர், ஈரோடு, குறிப்பாக கோவை, உள்ளிட்ட ஊர்களிலும் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமையில்லாத நிலை காணப்படுகிறது.

திருச்சியில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடையே உள்ள ஈகோ பிரச்சினையால் தி.மு.க. நிர்வாகிகள் பலர் பதவி இழந்து விமோசனத்திற்கு வழி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

உட்கட்சி பஞ்சாயத்தை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் அன்பகம் கலையும், ஆர்.எஸ்.பாரதியும் தான் கவனித்துக் கொள்கிறார்கள். இதனிடையே உட்கட்சி பிரச்சனைகளை முதலமைச்சர் ஸ்டாலினோ, அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ நேரடியாக தலையிட்டு பேசினால் தான் இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என்பது மூத்த முன்னோடிகளின் கருத்தாக உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி