தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்க முடிவு
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் இத்திட்டத்திற்காக அமைக்க வேண்டும் என்றும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஒருவர் கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை உறுதி படுத்தும் வகையில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
நடைபாதையில் வணிகம் செய்வோர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறு தொழில் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், “ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி பயனர்களை சேர்க்க வேண்டும் எனவும் பயன்பெறக்கூடிய ஒருவர் கூட விடுபடாமல் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ரேஷன் கடை எங்கு உள்ளதோ அங்கு தான் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu