நெல்லையில் 108 தேங்காய் உடைத்து பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் வேட்பாளர்
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. ஐஎன்டிஐஏ கூட்டணி சார்பில் தேர்தல் பணியாற்றும் வகையில் நெல்லையில் குறிச்சி தெற்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமை தாங்கி திறந்து வைத்தனர். முன்னதாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் பேசுகையில் ஐஎன்டிஐஏ கூட்டணி தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாபெரும் வெற்றி பெறும். பிரதமர் மோடி 4 முறை அல்ல தமிழகத்திற்கு 40 முறை வந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. மோடியின் மந்திரம் தமிழகத்தில் எடுபடாது. காரணம் என்னவென்று சொன்னால் இங்கு வலுவான தாரக மந்தி்ரம் உள்ளது. அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மந்திரம். இந்த மந்திரம் மோடி மந்திரத்தை தூக்கி வீசும் என்றார்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளாரான ராபர்ட் ப்ரூஸ் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் இருவரும் வண்ணாரப்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய ஸ்ரீ வெற்றி வேலடி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை செய்தனர். குறிப்பாக திருநெல்வேலி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என 108 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதனை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். வேட்பாளர் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர். இருப்பினும் இந்து கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் முதல் பிரச்சாரத்தை துவக்கினர்.
பின்னர் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் உடன் கூட்டணி கட்சிகளான திமுக விடுதலை சிறுத்தைகள் உட்பட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu