மிரட்டிய கர்நாடகம், மிரட்ட போகும் ஆந்திரா: என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?
முதல்வர் ஸ்டாலின்.
மிரட்டிய கர்நாடகம், மிரட்ட போகும் ஆந்திரா மாநிலங்களால் தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்க போகிறார் என தெரியவில்லை.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த வெற்றி அந்த கட்சிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம். கட்சி தொண்டர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் தமிழக மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பயன்படாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதற்கு காரணம் டெல்லியில் மீண்டும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து விட்டது. இந்த சூழலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியால் என்ன செய்ய முடியும் என்பதே தற்போது உள்ள கேள்வி.
அதே நேரத்தில் தேசிய ஜனநாய முன்னணி கூட்டணியில்ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு தேசம் எடுக்கும் முடிவுதான் பிரதமர் மோடி பதவியில் தொடர முடியுமா என்பதை நிர்மாணிக்கும் சக்தியாக உள்ளது. அதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி குறிப்பிட்ட சில தொகுதியில் வெற்றி பெற்று இருப்பதால் அவர்களது ஆதரவும் பாரதிய ஜனதாவிற்கு தேவை. கர்நாடகத்தை பொறுத்தவரை தற்போது அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான இந்த ஆட்சியில் துணை முதல்வராக இருக்கும் சிவகுமார் காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணையை கட்டியே தீருவோம் என சபதம் செய்து உள்ளார்.
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி இருந்ததால் இதுவரை அவர்களால் ஒரு சில திட்டங்களுக்கு இன்னும் அனுமதி பெற முடியவில்லை. தற்போது அங்கு பாரதிய ஜனதா கட்சி 17 இடங்களில் வெற்றி வாகை சூடி உள்ளது. இதன் காரணமாக காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக காங்கிரஸ் அரசு எடுக்கும் முடிவுகளை இனி பாரதிய ஜனதா அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.இதற்கு காரணம் அங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு 17 எம்பிக்கள் இருக்கிறார்கள் 17 இடங்களை வழங்கி உள்ள கர்நாடக மாநில மக்களுக்கு மோடி சப்போர்ட் செய்வாரா? ஒரு தொகுதி கூட பெறாத தமிழக மக்களுக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. கர்நாடகாவின் மிரட்டலுக்கு இனி மோடி பணிந்து தான் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இது தமிழகத்திற்கு எதிராக தான் முடியும்.
இது ஒரு புறம் இருக்க இன்னொரு அண்டை மாநிலமான ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே அணையை கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்தி முடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் பாலாற்றின் குறுக்கே சந்திரபாபு நாயுடு அணை கட்டினால் அதனை பிரதமர் மோடியும் கண்டு கொள்ள மாட்டார் என்று கருதப்படுகிறது. காரணம் சந்திரபாபு நாயுடு கைவிட்டால் மோடி அரசே நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். எனவே மோடியை மிரட்டியே சந்திரபாபு நாயுடு காரியம் சாதித்து விடுவார் என்கிற நிலை தான் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு புறம் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில் கூட பாரதிய ஜனதா கட்சி தற்போது ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கி இருப்பதால் அந்த திட்டத்திற்கும் பாரதிய ஜனதா தமிழகத்திற்கு ஆதரவு கொடுக்காது என்றே கருதப்படுகிறது.
மொத்தத்தில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றும் தமிழக மக்களுக்கு ஒரு பலனும் இல்லை என்றே கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே மிரட்டிய கர்நாடகம் , இனி மிரட்ட போகும் ஆந்திரா மாநிலங்கைள தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே தமிழக மக்களின் கேள்வி ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu