தூத்துக்குடி வெள்ளம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி

தூத்துக்குடி வெள்ளம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கேள்வி
X

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முதல்வர் ஸ்டாலின்.

தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது டெல்லி சென்றது ஏன் என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பேரிடர் நிதியில் இருந்து ரூ.900 கோடி வழங்கப்பட்டு விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தென் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை அறிந்த உடன் பிரதமர், உள்துறை அமைச்சர் உடனடியாக உதவிகளை செய்ததாக கூறியுள்ளார். வெள்ள நேரத்தில் முதல்வர் டெல்லி சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 90 செமீ மழை கொட்டித்தீர்த்தது.

தூத்துக்குடி, திருநெல்வேலி நகரங்கள் வெள்ளக்காடானது. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சிதைந்து போனதால் பல ஊர்கள் தனி தீவுகளாகி விட்டன. வெள்ளம் வடிந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்களாகும். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க இந்திய ராணுவம், பேரிடர் மீட்புப்படை களமிறங்கியது.

மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் தமிழக அரசு முன் வைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய 800 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கித்தவித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக கூறினார் நிர்மலா சீதாராமன். பேரிடர் நிதியில் இருந்து இதுவரை 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.

தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார் என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரை சந்தித்து பேசினார் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இரவு நேரம் என்றாலும் பிரதமர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார். மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வருக்கு இந்தியா கூட்டணியுடன் ஆலோசனைதான் முக்கியமாகிவிட்டதா என்று கேட்ட நிர்மலா சீதாராமன், 4 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி போய் மக்களை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tags

Next Story