மத்திய அரசை கண்டித்து திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிகத்தை சேர்ந்த ராமேஸ்வரம் மற்றும் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது மற்றும் சிங்கள கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இப்போது கூட ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை அவர்களை இலங்கை சிறையில் அடைத்து வைத்து உள்ளது. மத்திய அரசு இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என திருநாவுக்கரசரர் எம்பி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பின்படி திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் திருநாவுக்கரசர் எம்.பி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ, சேவாதள முரளி, கே. கே.சி. மாநிலத் தலைவர் அபுதாஹிர், கே.ஆர். ஆர். ராஜலிங்கம், மகளிர் அணி சீலாசலஸ், கோட்டத்தலைவர்கள் எட்வின், ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், ஜே.ஜே. வின்சன், பாக்கியராஜ், மலர் வெங்கடேசன், மணிவேல், வெங்கடேஷ் காந்தி, ஜெயம் கோபி, தர்மேஷ், ஆர்.ஜி. முரளி, பட்டேல், ஐ.டி. பிரிவு லோகேஸ்வரன் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் திருநாவுக்கரசர் எம்.பி.செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என எழுப்பிய கேள்விக்கு அப்படி கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என சூடாக பதில் அளித்தார்.

இன்னொரு செய்தியாளர் திருச்சிக்கே நீங்கள் வருவதில்லையே, தேர்தல் வந்தால் மட்டும் வருகிறீர்களே என எழுப்பிய கேள்விக்கு நீ பொய் சொல்ற, யாரிடமோ காசு வாங்கிக்கொண்டு இப்படி கேட்கிறாய், சீமான் பாணியில் இனி நான் கெட்ட வார்த்தையில் பேசினால் தான் நீ அடங்குவ.. யாருக்கோ அடிமையாக இருந்து கேள்வி கேட்குற, யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்குற, நான் திருச்சிக்கு வந்துகிட்டு தான் இருக்கேன், நீ பார்க்காவிட்டால் நான் என்ன செய்வது, நீ ஊருக்கு போயிருப்ப, நீயென்ன பெரிய யோக்கியனா, உன்னிடம் சர்டிபிகேட் கேட்டேனா, பிரஸ் என்றால் எது வேண்டாலும் கேட்பியா, உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல என மேலும் கோபமாக பதில் அளித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!