இந்தியா கூட்டணியில் உறுதியாக இருப்பதாக திருமாவளவன் தகவல்
தொல் திருமாவளவன்.
அ.தி.மு.க. உடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு அதே நிலைப்பாட்டுடன் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்று இறுதி செய்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் மக்கள் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படவில்லை. அதற்குக் காரணம் விசிக கேட்கும் தொகுதிகளையும் இடங்களையும் தர திமுக தயக்கம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் 2019 லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இந்த முறை விசிக கூடுதலாக ஒரு தொகுதியை கேட்பதால்தான் சிக்கல் உருவாகியுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிப்பதாக உறுதியாக கூறி வருகிறார் திருமாவளவன். இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும் அந்த தகுதியின் அடிப்படையில்தான் கூடுதல் தொகுதிகளை கேட்கிறோம்.
முதற்கட்ட பேச்சுவார்த்தையுடன் முடிந்து போய்விடவில்லை. எங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்னமும் அழைப்பு வரவில்லை. அப்படி அழைப்பு வரும் பட்சத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுவோம். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்திப்போம். எந்த சூழ்நிலையிலும் அதிமுக உடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. அதற்காகத்தான் திமுக உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட 2 தனித் தொகுதிகள், 1 பொதுத்தொகுதியை கேட்டிருக்கிறோம். எங்களுக்கு சாதகமான தொகுதிகளை தர வேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்துவோம். இந்தியா கூட்டணியில்தான் இணைந்து போட்டியிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றோம். பானைச்சின்னத்தில் போட்டியிடவே விரும்புகிறோம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
என்னதான் திருமாவளவன் இப்படி கூறி வந்தாலும் தமிழகத்தில் கூட்டணி விவகாரத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கேட்கும் தொகுதிகள் விடுதிலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை என்றால் அவர் எந்த முடிவிற்கும் செல்வார் என அரசியல் நோக்கர்கள் கருதி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu