உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ரவி மீதான வழக்கு டிச.1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர். என். ரவிக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. நீட் தேர்வு மசோதா உட்பட பல மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். மேலும் பொது மேடைகளில் தி.மு.க. அரசை விமர்சனம் செய்து பேசி வருகிறார். சனாதனம் குறித்தும் அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. அரசு அனுப்பிய பத்து மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு இருப்பதால் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
மேலும் பஞ்சாப் மாநில அரசு அந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் பனவாரிலால் புரோகித்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது போல் தமிழக அரசும் தமிழக ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தமிழக ஆளுநராக உள்ள ரவி மசோதாக்களை பரிசீலிக்காமல் என்ன செய்து கொண்டு இருந்தார் என சரமாரி கேள்விகளை எழுப்பியது.
இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் அவகாசம் கேட்டார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற டிசம்பர் 1ஆம் தேதி ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu