பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. வை ஒன்று சேர்ப்பேன்: சசிகலா திடீர் வாய்ஸ்

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. வை ஒன்று சேர்ப்பேன்: சசிகலா திடீர் வாய்ஸ்

வி.கே. சசிகலா.

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. வை ஒன்று சேர்ப்பேன் என எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் சசிகலா திடீர் என வாய்ஸ் கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க. நிறுவன தலைவர் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. கட்சியினர் மட்டும் இன்றி, அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மற்றும் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் .மீது பற்று கொண்ட அனைவரும் மற்றும் ஏழை எளிய மக்களும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் தவிர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தனி கட்சி நடத்தி வரும் டி.டி.வி. தினகரன் ஆகியோரும் தனித்தனியாக எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாக்களை நடத்தினார்கள்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து ஆணிற்கு நிகரான ஆளுமையுடன் ஆட்சிய நடத்திய மறைந்த ஜெயலலிதாவிற்கு தோழியாக இருந்தவர் வி.கே. சசிகலா. சசிகலாவும் இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.

எம். ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார் வி.கே.சசிகலா. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சசிகலா, நாங்கள் ஒன்று சேர்ந்தால் தி.மு.க. ஒரு சீட் கூட ஜெயிக்காது எனத் தெரிவித்தார்.

சசிகலா கூறியதாவது:-

எம். ஜி.ஆரின் வளர்ச்சி தி.மு.க.வில் இருந்த ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதனால் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார். எம்.ஜி.ஆர், மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்.

இப்போது தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். முதலமைச்சர் என்றால் 10 வாகனங்களுக்கு மத்தியில் செல்வது அல்ல, அதற்கு பெயர் முதலமைச்சர் அல்ல, மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அம்மா உணவகம் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. அனைத்து அணியினரும் ஒன்றுபட வேண்டும். இரண்டாகப் பிரிந்து கிடந்த அ.தி.மு.க. முன்பு எப்படி ஒன்றாகி பலம் பெற்றதோ, அதே போல் தற்போது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன்.

நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று போட்டி போட்டுக்கொண்டு கட்சியையும், தொண்டர்களையும் மறந்துவிட்டதாக அ.தி.மு.க. தொண்டர்கள் எண்ணுகிறார்கள். கட்சி பிளவுபட்டிருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. பிறகு தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். நான் என்றைக்கும் தொண்டர்களின் பக்கம் தான் இருப்பேன். எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும், மக்களுக்கும் நாம் செலுத்திய பெரிய நன்றிக்கடன். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க. ஒரு சீட் கூட வர முடியாது என்று அத்தனை தொண்டர்களும் சொல்கிறார்கள். அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதை செய்து காட்டுவேன்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

Tags

Next Story