‘தமிழகத்தில் அதிமுக- திமுக இடையே தான் போட்டி’- எடப்பாடி பழனிசாமி பேச்சு
திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடபாடி பழனிசாமி பேசினார்.
தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்து விட்டால் அது அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையேதான் என திருச்சி தேர்தல் பிரச்சார வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களும், அதிமுக சார்பில் தேமுதிக மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணியும், பாஜக பாமக உள்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனியாக போட்டியிடுகிறார். அந்த வகையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கடந்த 22ந்தேதி திருச்சி சிறுகனூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து இன்று திருச்சி அருகே நவலூர் குட்டுப்பட்டு வண்ணாங்கோவில் என்ற இடத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேர்களையும் அறிமுகம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாசாரத்தை தொடங்கினார். இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட 40 வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
அவர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். நான்கு முனை போட்டி என்கிறார்கள். மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையேதான்
உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டுள்ளார். அதை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டுங்கள்.விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு. இல்லை இன்று ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். ஆனால், திமுக அப்படியல்ல. அவர்களது குடும்பத்திற்காக தான் பாடுபடும்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
திமுக அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.
சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிமுக அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரமேலதா விஜயகாந்த் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் திமுக அரசு தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்தியிலுள்ளவர்களை வந்து தமிழகத்தில் ஆட்சியேற்க சொல்லுங்கள் என்றார்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை & கேஸ் விலை குறைப்பு என சாத்தியமில்லாத வாக்குறுதிகளை சொல்கின்றது திமுக.
சிஏஏ திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த எங்கள் கூட்டணி என்றும் விடாது.2026-க்கு பிறகு திமுகவே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எங்கள் கூட்டணி உருவாக்கும் என்றார்.
இந்த கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர். இதனால் பொதுக்கூட்டம் நடைபெற்ற திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த இடமே மாநாட்டு திடல் போல் காட்சி அளித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu