தமிழக வெற்றிக்கழக மாநாடு: விஜய் கட்சியில் சேரும் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

தமிழக வெற்றிக்கழக மாநாடு: விஜய் கட்சியில் சேரும் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
X

தமிழக வெற்றிக்கழகம் கொடியுடன் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் திமுக, அதிமுக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனி கட்சி தொடங்கினார். அவரது கட்சிக்க தமிழக வெற்றிக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது. கட்சி தொடங்கியபோதே 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்தார். அத்துடன் தனது கட்சியை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து தவெக தொண்டர்கள் மாநாட்டுத் தேதி அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர். விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள மாநாடு பற்றிய விவரங்களை காவல்துறை கேட்டிருந்தது. மொத்தம் 21 கேள்விகள் அடங்கிய வினாக்களுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு காவல்துறை கோரி இருந்தது. அதனைத் தொடர்ந்து தவெக வழக்கறிஞர் சார்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் முதலில் 50 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டது. அதன்பின்னர் அதைவிட அதிகப்படியானவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் பேச்சு அடிப்பட்டது. இதில் முரணான தகவல்கள் உள்ளதாக எதிர்க்கட்சியினர் சில கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிகூட விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிக்காமல் தாமதம் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். அதிமுக ஆட்சியில் பல போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் இந்தியாவிலேயே அதிமுக ஆட்சியில்தான் அதிக போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இன்னொரு பக்கம் விஜய் மாநாடு தொடர்பான சர்ச்சைகளை மூடி மறைப்பதற்காகத்தான் திமுக அரசு மகாவிஷ்ணு விவகாரத்தை மிகப்பெரிதாக்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ ஏறக்குறைய வரும் 23 ஆம் தேதி மாநாடு நடக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை விஜய் வெளியிட உள்ளார்.இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களுக்கு விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் கட்சியின் கொள்கை என்ன? கொடிக்கான விளக்கம் என்ன? அவரது அரசியல் பாதை எப்படி அமைய உள்ளது? தனது கட்சியின் அவருக்கு அடுத்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள் யார்? மாவட்ட நிர்வாகிகள் யார்? மாநில அளவில் நிர்வாகிகள் யார்? அவர்கள் பின்புலம் என்ன? எனப் பல விளக்கங்கள் இந்த மாநாட்டின் வழியேதான் விளக்கப்பட்ட உள்ளது.

இவை மட்டும் இல்லாமல் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கட்டாயம் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. அது உறுதி செய்யப்பட்ட தகவல் என்றும் அவரது நிர்வாகிகளே மறைமுகமாகப் பேசி உள்ளனர். இதனிடையே தான் அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கே சைக்கிள் பயணம் செய்தபோது ராகுல்காந்தியைத் தமிழ்நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். கலைஞர் 100 ரூபாய் நாணய விழாவுக்கு அவரை அழைக்காதது சர்ச்சையான நிலையில், அவர் விஜய் மாநாட்டில் பங்கேற்பார் எனக் கூறப்படும் சூழலில் இந்த அழைப்பை ஸ்டாலின் விட்டுள்ளதால் அது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. விஜய் நடத்த உள்ள மாநாட்டு மேடைக்கான டிசைன்கள் முன்பே கிராஃபிக் மூலம் வரைபடமாக வரைந்து அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேடை எப்படி இருக்கவேண்டும்? அதன் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? என ப்ளூபிரிண்ட் போட்டு, சினிமா கலை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஷங்கர் படப் பாணியில் மேடையை மிகப் பிரம்மாண்டமாக அமைக்க உள்ளது கலை இயக்குநர் குழு. இந்த மாநாட்டில் ராகுல் பங்கேற்பதைப்போல தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களின் வாழ்த்து செய்திகளையும் ஒரு குழு பெற்று வருகிறது.

குறிப்பாக பவன் கல்யாண், சிரஞ்சீவி போன்ற அரசியல் அனுபவம் கொண்ட பெரிய நடிகர்களிடம் வீடியோ மூலம் வாழ்த்தும் பெறப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கூடவே மாநாட்டில் விஜயகாந்த் படத்திறப்பு விழா ஒன்றும் இடம்பெறும் என்கிறார்கள். அதற்காக பிரேமலதா விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

விஜய் மாநாட்டில் அடுத்த ஹைலைட் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் சிலர் கட்சியில் இணைவார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது. டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மாநாட்டில் தன்னை இணைத்துக் கொள்ளத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஒபிஎஸ் மகன் சேர இருப்பதாகவும் சொல்கிறார்கள். முன்னாள் பெண் எம்பி ஒருவர் விஜய்யைச் சந்தித்து பேச்சு வார்த்தை முடிந்துவிட்டார். அவரும் மேடையேறுவார் எனச் சொல்கிறார்கள். கன்னியாகுமரி தொகுதியைச் சேர்ந்த எக்ஸ் அமைச்சர் விஜய் பக்கம் தாவுகிறார். இந்தப் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர் விஜய்யைச் சந்தித்துப் பேசி முடித்துவிட்டார். ஆனால், ராகுல் மேடைக்கு வந்தால் என்ன செய்து என்ற தயக்கம் இப்போது அவரை வாடி வதைப்பதாகச் சொல்கிறார்கள். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் பெண் அமைச்சரும் விஜய் கட்சிக்கு வருவார் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவை தவிர ரஜினி கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன சிலர் விஜய் பக்கம் வர உள்ளனர். மேலும் புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நிர்வாகிகளை மேடையில் விஜய் அறிவிப்பார் என்கிறார்கள். புதுச்சேரியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆனந்த் அங்கே களம் இறக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். விஜய் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருவதாகக் கூறப்படுவதால், மாநாட்டு மேடை ஜனநாயக முறைப்படி இருக்கும் என்கிறார்கள். குறிப்பாகப் பட்டியலின மக்களின் பிரதிநிதியாகக் கட்சியில் ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் மாநாட்டு உரையில் கூட அம்பேத்கர் கொள்கைகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். அதை அவரது கட்சி நிர்வாகிகளே உறுதிசெய்துள்ளனர். மேலும், விஜய் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தபோது அம்மா, அப்பாவை முன்வரிசையில் உட்கார வைக்கவில்லை. காரணம், குடும்ப அரசியல் என யாரும் சொல்லக்கூடாது என்பதால்தான். மாநாட்டு மேடையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களின் பிரதிநிதித்துவம் பளீச் என்று தெரியும்படி இருக்க வேண்டும் என்றும் விஜய் கட்டளைப் போட்டுள்ளார். ஆகவே, அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் முன்வரிசையில் உட்காரவைக்கப்பட உள்ளனர். சாதி, மதம், இனம் கடந்து பொதுவான அடையாளத்தைக் கட்சிக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பது விஜய் விருப்பம். ஆகவே, அவர் சீமான் பாணியில் இல்லாமல் கிட்டத்தட்ட திமுகவுக்கு நெருக்கமான கொள்கைகளைத்தான் முன்வைக்கப் போகிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !