தமிழக பட்ஜெட் கானல் நீர்- தாகம் தீர்க்காது: எடப்பாடி பழனிசாமி கருத்து

எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு பட்ஜெட் கானல் நீர் தாகம் தீர்க்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று காலை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் தேதி உள்பட பல மக்கள் நலதிட்டங்கள் இடம் பெற்று இருந்தன.
பட்ஜெட் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
என்.எல்.சி. விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலைக் கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாததைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம். மாநிலத்தில் வரி வருவாய் அதிகரித்துள்ளது. பற்றாக்குறையே இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறை 30,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் குறைந்துள்ளது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
தி.மு.க. அரசு மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளனர். இது தான் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் பரிசு. மகளிருக்கான உரிமைத் தொகை எல்லோருக்கும் வழங்கப்படும் என்றார்கள். ஆனால், இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்கிறார்கள். என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை.
மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது அது போல் தான் தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது. நீட் விலக்கு ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu