தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது

தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது
X
சென்னையில் தமிழக பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில தலைவர் ஆக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று பிரதமர் மோடி, சென்னை வந்தபோது சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக ஆண்டாளுக்கும், நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு பா.ஜ.க. மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், பா.ஜ.க. மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாள் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அமர் பிரசாத் ரெட்டியிடம் இருந்து நீங்கள் வாங்கி வந்த பணத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டதுடன் இதனை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றதாகத் தெரிகிறது. மேலும் அடிக்கும் போது அமர் பிரசாத் ரெட்டி தான் உங்களை அடிக்க சொன்னார் என்றும் சொல்லி அடித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் மீட்டு தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி, பயத்தின் காரணமாக இரண்டு நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்ததாக தெரிகிறது. பின்னர் உறவினர்கள் அறிவுரையின்படி பாதிக்கப்பட்ட தேவி, அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகிய 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself