தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி
பிரதமர் மோடி.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் தமிழர் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை முறிக்க தயாரா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக உள்ளவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். தற்போது ராகுல் காந்திக்கு ஆலோசகராக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சாம் பிட்ரோடாவின கருத்து சர்ச்சையை கிளப்பி வருகின்றன. ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாம் பிட்ரோடா தோல் நிறத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்து இருப்பது தான் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. அதாவது சாம் பிட்ரோடா "பல்வகைத்தன்மை கொண்ட ஜனநாயக நாட்டுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்" என்று பேசினார்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசுகையில்‛‛சாம் பி்டரோடா ராகுல் காந்தியின் ஆலோசகராக இருக்கிறார். அவரது கருத்தை தென்னிந்தியாவில் முதல்வராக உள்ள காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா (கர்நாடகா), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) ஏற்றுக்கொள்வார்களா?.
மேலும் நாள்தோறும் தமிழர்களின் கலாசாரம், பெருமை பற்றி பேசும் ஸ்டாலின் இந்த கூற்றை ஏற்கிறாரா? தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சி உடனான உறவை அவர் முறித்து கொள்வாரா? அதற்கான துணிச்சல் ஸ்டாலினிடம் இருக்கிறதா?. பிரித்தாள்வது தான் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியாக இருக்கிறது'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu