சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்: மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி?

முன்னாள் அமைச்சர் பொன்முடி.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், எம்.எல்.ஏ பதவியை கோரி சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி நாடலாம் என்று சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதனிடையே, சிறையில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிமன்றம் பொன்முடி, அவரது மனைவிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இன்று உத்தரவிட்டுள்ளது.
பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், அவர் மீண்டும் எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள சட்டப்பேரவை செயலகம், தனது எம்.எல்.ஏ பதவியை மீட்க தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி அணுகலாம் என்று அறிவித்துள்ளது. நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ பதவியை பொன்முடி மீட்கலாம் என்று சட்டப்பேரவை செயலாளர் கூறியுள்ளார். மேலும் ஊழல் தடுப்பு வழக்கில் இது போன்ற ஒரு நிலை முதல் முறையாக ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதேபோல், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா? இல்லை நடக்காதா? என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. இது தொடர்பாக திமுக மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறுகையில், என்னைப் பொறுத்தவரை நீதிமன்றம் இப்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பே நிறுத்தி வைக்கப்படும். இதனால் இடைத்தேர்தல் நடக்காது. கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பொன்முடி தனது பதவியில் நிச்சயம் தொடர்வார் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றம் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருப்பதால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவதோடு அமைச்சர் பதவியிலும் நியமிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu