தேர்தல் பத்திரம் விவகாரத்தில் எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி

உச்சநீதிமன்றம் (கோப்பு படம்)

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பி உள்ளது.

தேர்தல் பத்திரம் என்பது ரூபாய் நோட்டுகளைப் போல. அது யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பதற்காக விவரம் அதில் இருக்காது. பல பேரிடம் இருந்து அது கைமாறிக் கைமாறி ஒருவரை வந்தடைகிறது.

அதைப்போலத்தான் இந்தத் தேர்தல் பத்திரங்களும். யார் ஒரு தேர்தல் பத்திரத்தை வாங்குகிறார்? அவர் அந்தப் பத்திரத்தை எந்தக் கட்சிக்குக் கொடுக்கிறார் என்பது பரம ரகசியம்.

இதற்கு முன்னதாக இருந்த நடைமுறை என்பது வேறு. தேர்தல் அறக்கட்டளை மூலம் ஒரு கட்சிக்குத் தேர்தல் நிதி வழங்கப்படும். அது மிக வெளிப்படையானது. எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நிதி கொடுக்கிறது என்பது ஒளிவு மறைவு இல்லாமல் தரவுகள் பொது வெளியில் பகிரப்பட்டுவிடும். பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நடைமுறை என்பது இதற்கு மாறானது. அதில் ரகசியம் அதிகம் உள்ளது. ஆகவேதான் இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று சொல்லி உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தையே ரத்து செய்துள்ளது.

முன்பு இருந்த தேர்தல் அறக்கட்டளை நடைமுறை, அதற்குப் பிறகு பாஜக கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் நடைமுறை என இந்த இரண்டிற்கும் வருமானவரி விலக்கும் கொடுக்கப்பட்டு வந்தது. இதில் பாமர ஜனங்களின் வாதம் என்னவென்றால், ஒரு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் கூட அதற்குச் சேவை வரி என்று ஒன்றைக் கட்டுகிறோம். ஆனால், இத்தனை கோடிகள் புழங்கும் நிதிக்கு வரியே கிடையாது என்பதுதான். இது எப்படி நியாயமாகும் என்று பொதுமக்கள் ஒரு கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக இந்தியாவில் கருப்புப் பணப் பத்திர திட்டம் ஒன்று இருந்தது. நாட்டில் பலர் கருப்புப் பணத்தை வைத்துள்ளனர். அவர்களை அரசு எவ்வளவு சட்டங்களைக் கொண்டு கட்டுப்படுத்தினாலும், கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க முடியவில்லை. எனவே அதற்காக இந்தப் பத்திரங்களை மத்திய அரசு முன்பு கொண்டுவந்தது.

நாட்டில் பொது பொருளாதாரத்திற்குள் வராமல் சில நிறுவனங்களிடம் அல்லது தனி நபர்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் முடங்கிப் போய் உள்ளது எனவே இதன் மூலம் அதை பொது புழக்கத்திற்குள் கொண்டுவந்துவிடலாம் என அரசு கருதியது. 'ப்ளாக் மணி பேரல் பாண்ட்'டில் கருப்புப் பணத்தை முதலீடு செய்யலாம். 12 ஆண்டுகாலம் கழித்து அந்தப் பத்திரத்தை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்குக் குறைந்த வட்டி என்று மத்திய அரசு பல ஆண்டுகள் முன்பு அந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதிலும் பல போலி பத்திரங்கள் வந்துவிட்டன. அதை அரசால் தடுக்க முடியவில்லை. அதில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது.

இதைக் கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை அறிமுகம் செய்த போது மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தைப் போட்டது. அதில் 80களில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டத்தைச் சுட்டிக்காட்டி இருந்தது. இதில் முறையான தகவல்கள் இல்லாமல் இருந்தால், போலிகளின் நடமாட்டம் பெருகிவிடும் என எச்சரித்தது. அதை மனதில் வைத்துத்தான் விநியோகிக்கப்பட்டும் தேர்தல் பத்திரங்களில் மறைக்கப்பட்ட சீரியல் எண்களை அச்சிட்டுக் கொள்ள மத்திய அரசு எஸ்பிஐ வங்கிக்கு அனுமதி வழங்கியது.

இந்த சீரியல் எண்களைச் சாதாரண கண்களால் பார்க்க முடியாது. யுவி லைட் வெளிச்சத்தைப் பயன்படுத்தி மட்டுமே அதைப் பார்க்க முடியும். 2018 இல் இருந்து 2019 வரையான 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களின் விவரங்களை வெளியிடவே இல்லை. அதற்குப் பிறகான பத்திரங்களின் விவரத்தைத்தான் நீதி மன்றத்தில் வழங்கி உள்ளது. அதன்படி விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய அவகாசம் போதாது ஜூன் வரையான கால நீட்டிப்புத் தேவை என்றே எஸ்பிஐ நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட நீதிமன்றம், 'குறைந்த பட்ச நேர்மையை எஸ்பிஐயிடம் எதிர்பார்க்கிறோம்' என்று கூறி உடனடியாக கடந்த செவ்வாய்க் கிழமை மாலைக்குள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது. அப்படி இல்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரும் என எச்சரித்தது.

அதைக் கேட்டு ஆடிப்போன எஸ்பிஐ வங்கி அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களையும் உடனே ஒப்படைத்தது. அதற்கு முன்பாக இந்த விவரங்களை வழங்கத்தான் 3 மாதம் அவகாசம் கேட்டிருந்தது. அதற்கு எஸ்பிஐ சொன்ன விளக்கம், பத்திரங்களைப் பெற்றவர்களின் விவரத்தையும் அதைப் பணமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களையும் தனித்தனியாக வைத்துள்ளதாகவும் அதை ஒப்பிட்டுப் பார்த்து வழங்கவே அவகாசம் கேட்பதாகவும் கூறி இருந்தது.

இதைக் கேட்ட நீதிமன்றம், 'நாங்கள் ஆவணங்களைத்தான் கேட்டோம். அதைப் பகுத்துப் பார்த்து தரவுகளைத் தர சொல்லவில்லை. நீதிமன்ற தீர்ப்பை ஒழுங்காகப் படித்தீர்களா? ' எனக் கேட்டிருந்தது. அதன்படி ஆவணங்களை வங்கி ஒப்படைத்துவிட்டது. ஆனால் அதில் சீரியல் நம்பர்கள் இல்லை. எனவே இப்போது யார் ? யார் பத்திரம் வாங்கினர்? எந்த எந்தக் கட்சிகள் அதை நிதியாக்கினர் என்பதை ஒப்பிட சீரியல் எண் தேவை. அதை நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதுவரை விற்பனையான மொத்த பத்திரங்கள் 20217தான். அந்தத் தரவுகளைத் திரட்டுவது எஸ்பிஐக்கு பெரிய காரியம் இல்லை. அதில் 60% பத்திரங்கள் டெல்லியில் உள்ள கிளையில் விற்பனையாகி உள்ளன. ஆகவே அதை அனைத்தையும் விரல் நுனியில் திரட்டிவிட முடியும். அதன்படி சீரியல் நம்பர் கிடைத்துவிட்டால், உச்சநீதிமன்றம் அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி விடும்.

Tags

Next Story