காவிரி நீர் பெற்றுத்தர நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

காவிரி நீர் பெற்றுத்தர நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் தற்போது ஆளுநராக உள்ள ஆர். என்.ரவிக்கும் தி.மு.க.விற்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அது உச்ச கட்டத்திற்கு சென்றது. தி.மு.க.வினர் ஆளுநர் ரவியை விமர்சித்து வருவதும், ஆளுநர் ரவி தி.மு.க. அரசு அனுப்பும் மசோதாக்களை நிறுத்தி வைப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக திருச்சிக்கு வந்தார்.

முன்னதாக திருச்சியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க. தான் பா.ஜ.க.விற்கு அடிமையாக உள்ளது. எங்களுடைய தலைவர் கலைஞரும், இன்றைய தலைவர் ஸ்டாலினும் யாருக்கும் அடிமையாக இல்லை. யாருக்கும் பயந்ததும் இல்லை. தமிழக கவர்னருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால் அடிக்கடி டெல்லிக்கு சென்று வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரில் இருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்திடம் பேசி தமிழ்நாட்டுக்கு தண்ணீரை பெற்றுத் தர முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!