காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி?
கடந்த 28 ம் தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்., 17ல் அன்றும், அக்., 19ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் மறுத்து வருகிறார். இதனால், பிரியங்காவை தலைவராக்கும் முயற்சியும் நடந்தது. அதற்கும் ராகுல் தடை போட்டு விட்டார். இதனையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை புதிய தலைவராக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிருப்தி குழுவை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் மலையாள நாளிதழில் எழுதிய கட்டுரையில், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். செயற்குழுவில் காலியாக உள்ள பல இடங்களுக்கும் தேர்தலை அறிவித்திருக்க வேண்டும். முக்கிய பதவிகளில் இருந்து கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்பதை தீர்மானிக்க அகில இந்திய காங்கிரஸ் மற்றும் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுமதித்திருந்தால், புதிய நிர்வாகிகள் நியமனத்தை அங்கீகரிப்பதற்கும், புதிய தலைவரை கட்சியை வழிநடத்தவும் உதவியிருக்கும் எனக் கூறியுள்ளார்.
கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றால், புதிய நபரை தலைவராக்குங்கள். காங்கிரசில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டால், கட்சி மற்றும் நாட்டிற்காக அவர்களின் தொலைநோக்கு பார்வையை முன்வைப்பது நிச்சயமாக மக்களின் ஆர்வத்தை தூண்டும் எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து, அக். 17ல் நடக்கும் தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூர் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பல மூத்த தலைவர்களுடன் இது தொடர்பாக அவர், பேசி வருவதாகவும் தெரியவருகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சசி தரூரிடம், தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவீர்களா என கேட்டதற்கு, இது குறித்து தற்போது எந்த கருத்தும் கூற முடியாது. கட்டுரையில் என்ன எழுதினேனோ அதை ஒப்பு கொள்கிறேன். அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கான உட்கட்சி தேர்தல் மிகவும் நல்லது. தேர்தல் நடத்தப்படுவதை வரவேற்கிறேன். தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு குடும்பம் மட்டுமே, அதை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையில் மட்டும் கட்சி செயல்படக்கூடாது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu