செந்தில் பாலாஜிக்கு திடீர் மூச்சுத்திணறல்: அரசு மருத்துவமனையில் அனுமதி

செந்தில் பாலாஜிக்கு திடீர் மூச்சுத்திணறல்: அரசு மருத்துவமனையில் அனுமதி
X

சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கும்படி உச்சநீதிமன்றம். உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததும் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கோர்ட்டில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மருத்துவமனை சிகிச்சை முடிந்த பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அவர் இலாகா இல்லாத அமைச்சராக தான் தொடர்ந்து இருந்து வந்தார்.பின்னர் பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சைகளுக்கு இடையில் அவர் தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். அதை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார்.

புழல் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் மதிய உணவுக்கு பின்னர் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் செசன்ஸ் கோர்ட் மற்றும் ஹைகோர்ட், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அதே நேரத்தில் அவரது சகோதரர் அசோக்குமார் இன்னும் அமலாக்க துறையால் தேடப்பட்டு வருகிறார். அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story