செந்தில் பாலாஜி வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு மாற்றம்

செந்தில் பாலாஜி வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு மாற்றம்
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் கலால் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.

இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கினை 2 மாத காலத்தில் விசாரித்து முடிக்கும்படி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் இன்று வரை இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

Tags

Next Story