செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: அமலாக்க துறை விசாரணைக்கு 7 நாள் அனுமதி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: அமலாக்க துறை விசாரணைக்கு 7 நாள் அனுமதி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்க துறை விசாரணைக்கு 7 நாள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் ஏழு நாட்கள் மருத்துவமனையிலேயே விசாரணை நடத்துவதற்கும் கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடத்துனர் மற்றும் மெக்கானிக் பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் வாங்கிக் கொண்டு ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை நடத்தக்கூடாது என செந்தில் பாலாஜி உச்சநீதி மன்றம் வரை சென்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து கமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் கடந்த வாரம் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நெருக்கமானவர்கள் வீடுகளில் மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் சென்னையில் உள்ள வீட்டிலும் அவரது தம்பி வீட்டிலும் என்போர்ஸ்மெண்ட் டைரக்ட்ரேட் எனப்படும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி சோதனையை தொடங்கினார்கள்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் இந்த சோதனை நடைபெற்றது. காலையிலிருந்து இரவு வரை செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை செந்தில் பாலாஜியை அமலக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதுவரை நன்றாக இருந்த செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டதும் நெஞ்சு வலி ஏற்பட்டது.

அவர் தரையில் உருண்டு புரண்டு அழுதார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் அவரை சென்று பார்த்தனர். மருத்துவர்கள் நடத்திய சோதனையில் அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் இன்னும் முடிவுக்கு வந்தபாடு இல்லை.

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை ஜாமீனில் விடக்கூடாது. ஜாமீனில் விட்டால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என எதிர் மனு தாக்கல் செய்தனர். மேலும் அவரிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என கோரியும் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

இந்த இரண்டு மனுக்களையும் சென்னை செசன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார். மேலும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாட்கள் அதாவது வருகிற 23ஆம் தேதி வரை மருத்துவமனையில் வைத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கும் அனுமதி வழங்கினார். மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக நீதிபதி அல்லி இன்று மருத்துவமனைக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு மாநில அரசின் சிறைத்துறை மற்றும் போலீஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story