பாஜகவுடன் உறவில் உரசலா? அண்ணாமலைக்கு அதிமுக சூடுபறக்க பதிலடி
செல்லூர் ராஜூ
சென்னையில் மயிலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவை வீழ்த்துவது எளிது. திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது என்றார்.
அவர் மேலும் பேசுகையில், 90 % சதவிகித திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் திமுக அமைச்சர்கள் விமானம் ஏறி டெல்லி சென்று தமிழகத்திற்கான நிதியை கூட ஒழுங்காக பெற முடியாது என்றும் காட்டமாக பேசினார்.
இதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லை. அமைச்சர் பணிக்கு தமிழில், எழுத படிக்கத் தெரிந்தாலே போதும். துறையை சிறப்பாக உன்னிப்போடு, அர்ப்பணிப்போடு திறம்பட செய்தாலே போதுமானது என்றார்.
அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவரின் கருத்துக்கு, அதிமுக தரப்பில் இருந்து செல்லூர் ராஜூ சூடு பறக்க பதிலடி கொடுத்திருப்பது, பாஜக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடரும் என்று சொன்னாலும், இரு கட்சிகளுக்கு இடையே உறவு என்பது, 'தாமரை' இலை தண்ணீர் போலவே உள்ளதாக, தொண்டர்கள் கருதுகின்றனர். இச்சூழலில், செல்லூர் ராஜூவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu