இறையன்பு ஐயாவே இப்படி செய்யலாமா? சுற்றறிக்கைக்கு சீமான் கண்டனம்

இறையன்பு ஐயாவே இப்படி செய்யலாமா?  சுற்றறிக்கைக்கு சீமான் கண்டனம்
X

சீமான்

அனைத்துத் துறைச்செயலாளர்களும், செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவின் சுற்றறிக்கை அதிர்ச்சியளிப்பதாக, சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு திமுக அரசின் இச்செயல் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இதற்கு, ஐயா இறையன்பு போன்றவர்களும் துணைபோவது ஏமாற்றமளிக்கிறது. மதிப்புவாய்ந்த பெருந்தகைகள் இதுபோன்ற மதிப்பிழக்கும் வேலைகளைச் செய்யக்கூடாது.

ஆளுநர் பதவி என்பது அலங்காரப்பதவிதானே ஒழிய, அதிகாரம் செலுத்தும் நிர்வாகம் பதவியல்ல. மாநில ஆட்சியமைப்பு முறைகளில் தலையிட ஆளுநருக்கென்று தனிப்பட்ட அதிகார வரம்புகள் எதுவும் இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் வரையறுக்கப்பட்டவில்லை. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அமைச்சரவையின் நிர்வாகத்தின் ஆளுநர் தலையிட்டு, குறுக்கீடுசெய்து இடையூறு விளைத்திடுவது மக்களாட்சித்தத்துவத்தைக் குலைத்திடும் கொடுஞ்செயலாகும்.

ஏழு தமிழர் விடுதலைக்காக மாநில அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தரமறுத்து தனது கடமையைச் செய்யத் தவறும் ஆளுநர், மாநில நிர்வாகத்தை ஆய்வு செய்வதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும். பாஜக ஆளாத மாநிலங்களில் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதும், அரசமைப்பின் அதிகாரிகளோடு கலந்தாய்வு செய்வதும், துறைச்செயலாளர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதும் என, ஆளுநர்கள் மூலமாகக் குடைச்சலைக் கொடுக்கும் பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

பாஜகவின் அடாவடித்தனத்தை எதிர்த்துச் சண்டையிடாது சமரசமடைந்த திமுகவின் அணுகுமுறை வெட்கக்கேடானது. இதுதான் திமுக, பாஜகவை எதிர்க்கிற இலட்சணமா? திமுக அரசு, ஆளுநரின் முடிவுக்கு அடிபணிந்து மாநில உரிமையைப் பறிகொடுப்பது மிகப்பெரும் ஜனநாயகத்துரோகம் ஆகும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story