‘மின்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்’ சீமான் பேட்டி
![‘மின்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்’ சீமான் பேட்டி ‘மின்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்’ சீமான் பேட்டி](https://www.nativenews.in/h-upload/2023/06/11/1730071-siima.webp)
தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்றவரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். பா.ஜ.க. கடந்த ஒன்பது ஆண்டுகளில் எந்த சாதனையும் செய்யவில்லை. நாடும் நாட்டு மக்களும் பட்டிருக்கின்ற வேதனைகளை தான் விளக்கி பேச வேண்டும்.
அதானியை வளர்த்துவிட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள்? எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள். எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை. கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார். அதே போன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கி விடுவார். இரண்டு பேருமே எதுவுமே செய்யவில்லை.
தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள், அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில், அதனை தற்போதிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். மாநிலங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்று ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.
இஸ்லாமிய சிறை கைதிகளை இவர்கள் விடுதலையும் செய்யமாட்டார்கள். அதே போன்று சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் விடுதலை செய்யமாட்டார்கள். அதற்கு வேறு ஆட்சி மாறினால் தான் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu