ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் பேசுவதா? ஆளுநர் ரவிக்கு சி.பி.எம். கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் பேசுவதா? ஆளுநர் ரவிக்கு சி.பி.எம். கண்டனம்
X

ஆளுநர் ரவி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் பேசுவதா? என தமிழக ஆளுநர் ரவிக்கு சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநருக்கு சி.பி.ஐ. (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும், உறுப்பினராக சிவக்குமாரையும் நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க nண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. இதற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய முறையில் பதில் அளித்தும் தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி தான் போகும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை பரப்பி வருவதுடன் ஒரு முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சிறுமைபடுத்தி பேசுவதுடன் அவதூறுகளையும் பொழிந்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் வரம்புகளை மீறி தொடர்ந்து நிராகரித்து வருகிறார். இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்களும், ஜனநாயக இயக்கங்களும், நாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து குரெலழுப்பியும் ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முழுநேர அரசியல்வாதியாகவும்,தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களின் நலன்களுக்கும் விரோதமாக முட்டுக்கட்டையாக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!