ரயிலில் பிடிபட்ட ரூ.4.5 கோடி பணம்: தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்

ரயிலில் பிடிபட்ட ரூ.4.5 கோடி பணம்: தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்

நெல்லை ரயிலில் பிடிபட்ட ரூ.4.5 கோடி பணத்தை எண்ணும் காட்சி.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட ரூ.4.5 கோடி பணம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்து உள்ளது.

தாம்பரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் திமுகவின் ஆர் எஸ் பாரதி புகார் அளித்துள்ளார்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் பணம் சிலர் பணம் கடத்தி செல்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு 9 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ரயிலின் குளிர்சாதன பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இதில், ரூபாய் 4.5 கோடி பணம் இருந்தது தெரியவந்தது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகிக்க இந்த பணம் நெல்லைக்கு கடத்தப்பட இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இங்கு கைப்பற்றப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கொடுப்பதாக எடுத்துச்செல்லபட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியது.

ஏனென்றால், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ் என்பதாலும், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாலும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. எனினும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் திமுகவின் ஆர் எஸ் பாரதி புகார் அளித்துள்ளார். தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது நெல்லை லோக்சபா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மட்டுமின்றி, பாஜகவின் அனைத்து வேட்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பது தொடர்பாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும், எனக்கும் தொடர்பு இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story