‘சினிமாவில் ரஜினி அண்ணாமலை- நிஜவாழ்வில் நான் தான் அண்ணாமலை’- எச். ராஜா
திருச்செந்தூரில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேட்டியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் மூலவர், சண்முகர், சம்ஹாரமூர்த்தி, மற்றும் வள்ளி தெய்வானை சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிப்பதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை. மேலும், தி.மு.க.வின் ஊழல் லட்சணம் 1977 ஆம் ஆண்டே மக்களுக்கு தெரியும். ஊழலில் சிறை சென்ற செந்தில்பாலாஜியை ஏன் இலாகா இல்லாத அமைச்சராக தி.மு.க. வைத்துள்ளது.
இந்து மதம் குறித்து வெறுப்புணர்வுடன் பேசிய உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும். தி.மு.க. அரசு நேர்மை தவறிய அரசாக செயல்படுகிறது. திமுக அரசு எப்போது முடியும் என மக்கள் நம்புகின்றனர்.
தி.மு.க. ஆட்சி வந்ததில் இருந்தே மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும் போது யூ.பி.எஸ். தேவைப்படவில்லை. அவர்கள் இருவரும் சென்றபின் யூ.பி.எஸ் இல்லாமல் இருக்கமுடியவில்லை. சினிமாவில் ரஜினி அண்ணாமலை என்றால் நிஜவாழ்க்கையில் எச். ராஜா தான் அண்ணாமலை. வீடு வீடாக பால் ஊற்றிதான் பட்டம் படித்ததால் அப்படி கூறுகிறேன்.
இந்து மதத்தை அழிப்பதாக தி.மு.க. பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதற்கான எதிர்வினை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும். காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெரிய பூஜ்ஜியம் வாங்கும். காங்கிரஸ் கட்சியை அழிப்பதற்கு அதன் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மட்டுமே போதும்.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu