இட ஒதுக்கீடு உச்ச வரம்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
ராகுல் காந்தி.
லோக்சபா தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீடுக்கான 50 சதவிகிதம் என்கிற உச்சவரம்பு தளர்த்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாளை மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்குகிறது.
அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடுக்கான 50 சதவிகித உச்சவரம்பு நீக்கப்பட்டு, வேண்டிய அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது.. "அரசியல் சாசனத்தை காப்பாற்றவே இந்த தேர்தல் நடக்கிறது. பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் அரசியலமைப்பு முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறார்கள். ஆனால் காங்கிரசும், இந்தியா கூட்டணியும் இதை காப்பாற்ற முயற்சிக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் நீர், நிலம், காடு ஆகியவை பொதுவானது. இவற்றின் மீது சமானிய மக்களின் உரிமைய பறிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார்.
வெற்றி பெற்றால் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று அவர்களே கூறியிருக்கிறார்கள். அதனால்தான் 400 இடங்களுக்கு குறி வைத்திருக்கிறார்கள். எப்படியும் 400 இடங்கள் அவர்களுக்கு கிடைக்காது. 150 இடங்கள் கிடைத்தால் அதிகம். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை நீக்குவதாக சொல்கிறார்கள். எனவே நான் இந்த இடத்தில் வைத்து சொல்கிறேன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை 50 சதவிகிதத்திலிருந்து நீக்குவோம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவோம். நாடு முழுவதும் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உங்கள் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். உங்களிடமிருந்து நிலம் பிடுங்கப்படுகிறது. ஆனால் இது குறித்த செய்திகள் எதுவும் ஊடகத்தில் வெளி வராது. ஏனெனில் அங்கு பழங்குடியினர் யாரும் இல்லை. நாட்டை நிர்வகிக்கும் 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒரே ஒருவர் மட்டுமே பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே இடஒதுக்கீடுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu