அ.தி.மு.க.வில் மகளிருக்கு முன்னுரிமை: பெண் மாவட்ட செயலாளர் நியமனம்
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா.
மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெயசுதா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதன் காரணமாக கட்சியை பலப்படுத்தும் பணியில் இரு கட்சிகளும் இறங்கி உள்ளன.
அந்த வகையில் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இன்று காலியாக இருந்த ஐந்து மாவட்ட செயலாளர்கள் பதவிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில மாவட்டங்கள் கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மற்றும் தேனி, நெல்லை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக போளூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்து வரும் எல் ஜெய சுதா (முன்னாள் எம்.எல்.ஏ) நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மத்திய மாவட்டத்தில் ஆரணி, போளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பினை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டு உள்ளார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகளை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பதவியாகும். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த கட்சிகளின் மாவட்ட செயலாளர் பதவிக்கு தனி முக்கியத்துவம் உண்டு .
அந்த வகையில் செல்வாக்கு மிக்கவர்களே மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. அமைப்பு ரீதியான ஒரு மாவட்டத்தின் செயலாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தி.மு.க.வில் தற்போது பெண் மாவட்ட செயலாளர் யாரும் இல்லை. கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்த போது கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த வாசுகி முருகேசன் சாலை விபத்தில் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu