நாளை திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை

நாளை திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை
X

பிரதமர் மோடி.

நாளை திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணி உள்ளது. அதை எதிர்க்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்பட பல கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த5 மாநில தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் மட்டுமே வென்றது. பா.ஜனதா 3 மாநிலங்களை கைப்பற்றியது. இந்த வெற்றி பா.ஜனதாவுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலையும் சந்திக்க தீவிரமாகி வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் 'வேண்டும் மோடி, மீண்டும் மோடி' என்ற கோஷத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

3-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்க பா.ஜனதா வியூகம் அமைத்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது போன்ற பணிகளில் பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரை பிரதான கட்சியான அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்து இருந்தது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டணியில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட உரசலை தொடர்ந்து பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.

தற்போதைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் பா.ஜனதா தனித்து நிற்கிறது. அதே நேரம் அதைப்பற்றி கவலைப்படாமல் கூட்டணி விவகாரங்களை கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும் என்று அண்ணாமலை தன்வழியில் கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்து 4 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாளை (2-ந்தேதி) தமிழகம் வருகிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை காலை திருச்சி வருகிறார். பிரதான கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பா.ஜனதாவை எதிர்த்து களத்தில் நிற்கின்றன. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு சவாலானதாகவே இருக்கும்.

பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

பின்னர் மதியம் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான பன்னாட்டு புதிய விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விழாவில் ரூ.19 ஆயிரத்து 850 கோடி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த 2 நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்களை அறியவும், அதற்கு ஏற்ப கட்சியினர் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 31 பேரை தனித்தனியாக தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்கள். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்,எச்.ராஜா, துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், சீனிவாசன், வி.பி.துரைசாமி ,எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி உள்ளிட்ட 31 பேர் கலந்து கொள்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி இல்லாத நிலையில் பா.ஜனதாவின் பலம் எவ்வாறு உள்ளது? கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் எப்படி இருக்கும்? மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றி நிர்வாகிகளிடம் கேட்டறிவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில செயல் திட்டங்களையும் கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து லட்சத்தீவு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிற்பகல்2.30 மணிக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எடுத்து சொல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி விழாக்கோலம் பூண்டு வருகிறது. விழா நடைபெறும் விமான நிலைய பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்