நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.விற்கு 370 தொகுதிகள்: பிரதமர் மோடி நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.விற்கு 370 தொகுதிகள்: பிரதமர் மோடி நம்பிக்கை
X

பிரதமர் நரேந்திர மோடி.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 370 தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் , மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு,கூட்டணி பேச்சு வார்த்தை என தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஜனாதிபதி திரௌபதி முர்முஉரையாற்றி முடித்து உள்ளார்.

இந்த நிலையில் ஆங்கில செய்தி சேனலான டைம்ஸ் நவ் இ டி ஜி பிரதமர் பதவி தொடர்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தற்போதைய பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு 64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என 17 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமர் ஆவதற்கு 15 சதவீதம் பேரும் ,டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி நிறுவன தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராவதற்கு 12 சதவீதம் பேரும் சிவசேனா தலைவர் உத்தவ் பால் தாக்கரே பிரதமர் ஆவதற்கு 8சதவீதம் பேரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் ஆவதற்கு 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்து பேசினார் அப்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கூறினார். பாரதிய ஜனதா கட்சி மட்டும் 370 இடங்களில் வெற்றி பெறும். உலகின் மூன்றாவது பெரிய சக்தியாக இந்தியா உருவாகும். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது.எப்போது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வும் வருகிறது. முத்ரா திட்டத்தின் மூலம் ஏராளமான தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளனர். முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சி காலங்களில் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே சென்றன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய காலத்தில் 30 சதவீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எந்த உரிமையும் வழங்காமல் காங்கிரஸ் வைத்து இருந்தது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய நாடாக இடம் பிடித்துள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. அரசு போல வேறுயாரும் திட்டங்கள் கொண்டு வந்தது இல்லை. இந்தியாவில் பெண்களுக்கு இடமில்லாத எந்த துறையும் இன்று இல்லை. பெண்களின் சக்தியை இந்தியா முழுமையாக பயன்படுத்துகிறது. முன்பு பெண் குழந்தைகள் பிறப்பு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்து விட்டது. இந்தியர்களை பற்றி முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் கருத்து உயர்வானதாக இருந்ததில்லை. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து இந்திய நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்.பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையால் 370 சட்டப்பிரிவை முடிவுக்கு கொண்டு வந்தோம்.இந்திய மக்கள் முன்பை விட பாஜகவிற்கு அதிக ஆதரவு கரம் கொடுக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே பள்ளத்தில் இருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக செய்த திட்டங்களை மக்கள் உணர்ந்துள்ளனர். 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடுகளும், 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!