தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கிய விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நல நற்பணிகளை செய்து வந்தார். ரசிகர்மன்ற நிர்வாகிகள் முதலில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு தனது சொந்த ஊரான மதுரையில் விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கினார். தனது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என பெயர் சூட்டினார். தொடக்க விழா மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்த விஜயகாந்த் மக்களுடனும், தெய்வத்துடனும் தான் தங்கள் கட்சி கூட்டணி என்றார்.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து தேர்தல் களத்தை சந்தித்தது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வேட்பாளர்களை நிறுத்தியது. அப்போது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் தி.மு.க ,அ.தி.மு.க. ஆகிய இரு பிரதான கட்சிகளின் பல வேட்பாளர்களை தோற்கடிக்கும் வகையில் பத்தாயிரம் முதல் லட்சம் வாக்குகள் வரை பெற்றனர். இதனால் விஜயகாந்த் தன்னை தமிழக அரசியலின் புதிய சக்தி என்பதை நிரூபித்தார்.
இதன் காரணமாக 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்தது. 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. தி.மு.க.வை விட அதிகமாக அதாவது 29 தொகுதிகளில் தே.மு.தி.க .வெற்றி பெற்றதால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக புதிய அவதாரம் எடுத்தார்.
ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக தே.மு.தி.க. வின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்தனர். இதன் விளைவாக 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அதிமுக கூட்டணியை உதறி தள்ளவிட்டு மக்கள் நல கூட்டணிக்கு தலைமை தாங்கியது. அந்த தேர்தலில் தே.மு.தி.க. மட்டும் அல்ல மக்கள் நல கூட்டணி கட்சிகளும் ஒட்டுமொத்தமாக தோல்வியை தழுவின.
அதன்பின்னர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக தே.மு.தி.க. தேய தொடங்கியது. எந்த தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
இந்த நிலையில் தான் இன்று சென்னையில் தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். அவர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்.அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. அவரது நிலையை அறிந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
விஜயகாந்த் கட்சியின் நிறுவனர், தலைவர், பொதுச்செயலாளர் என மூன்று பதவிகளை வகித்து வந்தார். இந்த கூட்டத்தில் தற்போது பொருளாளர் பதவி வகித்து வரும் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பிரேமலதா முதுகுக்கு பின்னால் யார் யார் என்னென்ன பேசுகிறீர்கள் என்று தனக்குத் தெரியும் தன்னை பற்றி முதுகுக்கு பின்னால் இல்லாததும் பொல்லாததும் சிலர் பேசுவதை தெரிந்தும் தாம் பொறுமையாக எதுவும் தெரியாதது போலவே இருப்பதாக ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு காரணம் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே தவிர வேறு இல்லை எனத் தெரிவித்தார். தன்னை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவியை முள் கிரீடமாகவே பார்க்கிறேன் என்றும் தனக்கு பொறுப்புகள் கூடியிருப்பதால் தாம் டென்ஷனாக இருக்கிறேன் எனவும் பேசினார்.
ஆனால் ஒன்றை மட்டும் தேமுதிகவினர் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டு பேசிய பிரேமலதா, அரசியலில் தாம் எதற்கும் பயப்படமாட்டேன் என்றும் சவால் என்று வந்துவிட்டால் சவால் தான் சமரசமே கிடையாது எனவும் ஆவேசம் காட்டினார். தன்னுடன் கட்சிக்காக சேர்ந்து உழைக்க நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தன்னிடம் யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
கட்சி தொடர்புடைய எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நிர்வாகிகள் தன்னிடம் நேரடியாக டிஸ்கஸ் நடத்தலாம் என்றும் இடையே குறுக்கீடே இருக்காது என்ற உறுதியையும் அளித்துள்ளார். இதன் மூலம் தே.மு.தி.க. தலைமைக்கழக நிர்வாகிகள் சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். தொண்டனாக இருந்தாலும் சரி, நிர்வாகிகளாக இருந்தாலும் சரி நேரடியாக தன்னை சந்தித்து பேசலாம் என்றும் தே.மு.தி.க.வினரை முக்கிய பொறுப்புகளில் அமர வைக்கும் வரை தாம் ஓயமாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார். தேமுதிகவினர் உண்மையாக, ஒற்றுமையாக கட்சிக்கு உழைக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தேமுதிகவை ஆட்சியில் அமர வைக்கும் நாள் தான் விஜயகாந்தின் லட்சியம் நிறைவேறிய நாளாக அமையும் எனப் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu