இன்பநிதிக்கு பாசறையா? போஸ்டர் ஒட்டிய இருவர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்
புதுக்கோட்டையில் இன்பநிதி பாசறை என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.
இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் புதுக்கோட்டை தி.மு.க. நிர்வாகிகள் இரண்டு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது தி.மு.க. தலைவராகவும், முதல் அமைச்சராகவும் இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவரது மகன் உதயநிதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும், விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் வருங்கால முதல்வர் என தி.மு.க. முன்னணி பிரமுகர்களால் பேசப்பட்டு வருகிறது. தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் புகைப்படம் மற்றும் இன்பநிதி பாசறை என்ற வாசகத்துடன் வரும் 24ஆம் தேதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 'எதிர்காலமே!' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் மண்ணைப் பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை. போராட்டக்களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை' என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் போஸ்டர் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் இருவரும் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச்சேர்ந்த மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu