சீனா பிடியில் அம்பாந்தோட்டை துறைமுகம் - இந்திய பூகோளநலனுக்கு ஆபத்து-வைகோ அறிக்கை.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ.
சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து என வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையில் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின் தென் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு அளித்து இருக்கின்றது.
சூயஸ் கால்வாய் அருகே மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்டதாகும். இதில் 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். இந்தத் துறைமுகம் அந்த மார்க்கமாகச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைக்கக்கூடியது. இதனால் எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சீன நாடு இலங்கையிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று, இந்த மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி, சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஹெக்டேர் நிலத்தையும் கையகப்படுத்தி சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.
சீனாவின் கனவுத் திட்டமான சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும், துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் 'புதிய பட்டுப் பாதை' திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியைக் கைப்பற்றிக் கொள்வதும், அங்கே இராணுவத் துருப்புகளை நிறுத்தவும் துணிந்தால் தமிழ்நாட்டிற்கும் கேடு விளையும்.
எனவே ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu