மாறி மாறி வசைபாடுவதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகள் மக்கள் பணி ஆற்றுவார்களா..?
பொதுமக்கள்.(கோப்பு படம்)
DMK And AIADMK-
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் நடக்கும் அரசியலை விட தமிழக அரசியல் முற்றிலும் வேறுபட்டது. அதாவது திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதும் சரி, அதிமுக தலைவராக எம்ஜிஆர் இருந்த போதும் சரி இருவரும் கொள்கை ரீதியாக எதிரிகள் போல் பேசிக்கொள்வார்களே, தவிர இயல்பாக இருவரும் நல்ல நண்பர்கள். காரணம் அக்காலந்தொட்டு சினிமாவில் கோலோச்சியவர்கள். எம்ஜிஆர் மறைவின்போது கூட கருணாநிதி ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேச வந்திருந்தார். ஆனால் அவர் இறந்த தகவல் முதன் முதலாக கருணாநிதிக்குதான் சொல்லப்பட்டதாக அப்போதே பேசப்பட்டது. அந்த அளவிற்கு இருவரும் கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நல்ல நட்பில் இருந்தனர்.
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக தலைமையேற்று திறம்பட கட்சியை கட்டுக்கோப்போடு வழிநடத்தி வந்தார்.யாராவது திமுகவோடு உறவில் இருப்பதாக தெரியவந்தால் அவர் பதவி காலியாகிவிடும். இதுபோல் அவ்வப்போது அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டதால் அவரது கட்சி நிர்வாகிகளும் அதற்கு கட்டுப்பட்டே இருந்தனர்.
இதுபோல் தமிழகத்தில்தான் பிரதான கட்சிகள் இரண்டும் எதிரிகள் போல் செயல்படுகின்றனர். ஆனால் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாஜ ஆட்சியில் இருந்தாலும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களும் போய் கலந்துகொண்டு பேசுகின்றனர். மாற்று கட்சியினர் திருமணம் என்றாலும் அழைப்பு உண்டு அவர்களும் கலந்து கொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதைக் காணமுடிகிறது. அது ஒரு ஆரோக்யமான அரசியல் களம்.
ஆனால்...அப்பப்பா தமிழகத்தில் மட்டும் அதுபோல் இருந்துவிட்டால் அவ்வளவுதான் போங்க... இங்க இருவரும் வெட்டு,. குத்து செய்துக்காத குறையாகத்தான் சட்டசபையில் கூட பேசிக்கிறாங்க... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அமைகிறது. மக்கள்தான் உங்களுக்கு வாக்களிக்கின்றனர். ஆனால் அந்த மக்கள் பிரச்னைகளை இந்த களேபரங்களில் மக்கள் பிரச்னைகள் காணாமல் போய்விடுகின்றன.
மக்கள் பிரச்னைகள் குறித்து பேசவே சட்டசபை. ஆனால் அந்த சபை நடக்கும்போது இவர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டுக்கொள்வதால் பல நேரங்களில் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது திமுக வெளிநடப்பு செய்வதும், அதேபோல் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிமுக வெளிநடப்பு செய்வதுமாக மக்கள் பிரச்னைகள் அங்கு கலந்துரையாடப்படுவதில்லை.
கேரள ஒற்றுமை
கேரளாவைப் பாருங்கள்..எதிர்க்கட்சிகள் மல்லுக்கட்டிக்கொண்டாலும் பொது பிரச்னை என்று வரும்போது ஒத்த கருத்தை அடைவார்கள். வளங்களை கொள்ளை அடிப்பது அங்கு இல்லை. மணலை வாருவது அங்கு இல்லை. அங்கு எல்லா வளமும் நிறைந்து காணப்படுகிறது. அவர்கள் மாநிலத்தைக் காப்பதில் ஒருமித்த கருத்தினை பெற்றுள்ளனர். காரணம் படித்தவர்கள். நடிகனுக்குப்பின்னால் ஓடும் கூட்டம் அங்கு இல்லை.
அதேபோல தமிழகத்திலும் தமிழ்நாட்டைப்பற்றி சிந்தித்து செயல்பட, நமது வளங்களை காப்பாற்ற (ஏற்கனவே எல்லாம் ஒன்னும் இல்லாமல் ஆக்கியாச்சு என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது) நல்ல எதிர்கால தலைமுறையினை உருவாக்க ஒரு சிந்தனைமிகுந்த அறிவுசார் அரசியல் தலைமை இங்கு வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக மட்டுமே செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு நடுவே நாட்டைப்பற்றிய சிந்தனை, நாட்டுமக்களைப்பற்றிய சிந்தனை கொண்ட ஒரு அரசியல் களம் இங்கு உருவாக்கப்பட வேண்டும்.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் அதிமுகவைப் பற்றியும், அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தால் திமுகவைப் பற்றியும் மாறி மாறி வசை பாடிக்கொண்டு தன் சொந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் பற்றி பேசுவதே இல்லை என்ற குறைபாடு மக்கள் மனதில் ஆழமாக பதிந்து கிடக்கிறது.
நியாயம் எது என்று ஆராயாத மனநிலை :
உதாரணத்திற்கு பஸ் கட்டண உயர்வு என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டால், ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்குத்தான் அரசின் நிதி நிலை தெரியும். சிலநேரங்களில் சில அதிரடி முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கும். அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை திசைதிருப்ப முனைவது சரியான வழிமுறையல்ல. .மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. நடப்பதை வேடிக்கைப்பார்க்கும் கூட்டமல்ல மக்கள். நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப்பார்க்கும் வல்லமை கொண்டவர்கள் மக்கள். யாரை அரசுக்கட்டிலில் ஏற்றவேண்டும் என்று முடிவு செய்தவர்களுக்கு அவர்களின் ஆட்சி பற்றிய தெளிவு இல்லாமலா இருப்பார்கள்?
எந்த அரசியல் கட்சியும் பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பித்துவிட முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. மக்களின் நியாயத்தராசில் அவர்களுக்கான சராசரி மதிப்பீடு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை அரசியல்வாதிகள் மறந்துவிடக்கூடாது.
மக்கள் பிரச்னைகள் தேக்கம்
தமிழகத்தினைப் பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சிக்குவந்தாலும் ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்தவர்கள்தான் தவறு செய்துவிட்டதாக பேசுவது அதிகமாக உள்ளது. யார் ஆட்சியில் உள்ளீர்களோ அவர்கள் அந்த பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர அவர்கள் ஆட்சியில் இதுபோல் செய்ததால்தான் இப்படி நிகழ்ந்துவிட்டது என குற்றச்சாட்டினை முன் வைக்கக்கூடாது. அது ஆட்சிமீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.
ஆனால், மக்களுக்கு யார் என்ன செய்தார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதனால் ஒருவரை ஒருவர் வசைபாடுவதே மக்கள் நம்பிக்கையை இழக்கநேரிடும் என்பதை அரசியல் கட்சிகள் உணரவேண்டும்.
இனியாவது திருந்துவார்களா?
ஆட்சியில் இருந்தால் மட்டும்தான் மக்கள் பணி செய்ய முடியும் என்பதை அரசியல்வாதிகள் உடைத்தெறியவேண்டும். ஆமாம் எந்த வடிவிலும் மக்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டால், மக்களே நல்ல முடிவை வழங்குவார்கள்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி இருக்கப்போகும் நாட்களிலாவது ஆளுங்கட்சியின் பெயர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டுமானால் அடிமட்ட அரசியல் தொண்டர்களும் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றினால் திமுகவின் பெயர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி எதிர்க்கட்சியினர் ஆட்சியினரின் செயல்பாடுகளில் மிரண்டுபோய் இருக்கவேண்டும். அந்த அளவுக்கு ஆட்சியின் செயல்பாடுகள் செம்மையானதாக இருக்கவேண்டும். குறைகள் இல்லாத ஆட்சி செய்ய முடியாது என்பதை எதிர்கட்சிகள் உணரவேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu