ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக எம்எல்ஏ உள்பட 30 பேருக்கு போலீஸ் சம்மன்
ஜெயக்குமார் தனசிங்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இடம் பெற்ற நபர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார்.
தொழிலதிபராகவும் விளங்கி வந்த கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் உவரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் ஜெயக்குமார் தனசிங் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் ஒயரால் பலகையில் கட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. இதையடுத்து பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
தடயவியல் நிபுணர்கள் மீண்டும் ஜெயக்குமார் தனசிங் பிணமாக கிடந்த தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, ஜெயக்குமார் தனசிங் வீட்டு பணியாளர்களிடமும் தனித்தனியாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணேசன் என்ற பணியாளரை தோட்டத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஜெயக்குமார் தனசிங்கின் செல்போன் மாயமாகி உள்ளதால் அதை தேடும் பணியில் மற்றொரு தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஜெயக்குமார் மரணம் அடைந்தது தொடர்பாக 30 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கட்சி நிர்வாகிகள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது நெல்லை மாவட்ட காவல் துறை. ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்ளிட்டோரும் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது. நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த லிஸ்டில் இருப்பதாக சொல்லபடுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வெளியான கடிதத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் வழக்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயக்குமார் மரணமானது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது உறுதி செய்யப்பட்டால் தான் இந்த வழக்கில் துப்பு துலங்க வழி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu