அ.தி.மு.க.வுக்கு நிபந்தனை விதித்த பா.ம.க.: 2026-ல் துணை முதல்வர் பதவி?
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உறுதியாகும் நிலையில் உள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பா.ம.க. தரப்பில் ஒரு மேல் சபை பதவியும் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். டெல்லி மேல்சபைக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போதும். மேலும் பா.ம.க.விடமும் 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே மேல்சபைக்கு 2 எம்.பி.க்களை அனுப்ப முடியும். அதில் ஒரு பதவியை பா.ம.க. வற்புறுத்தி வருகிறது. இந்த டீல் முடிந்தால் கூட்டணி இறுதியாகி விடும் என்கிறார்கள்.
கூட்டணி விஷயத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், பா.ம.க. தலைவர் அன்புமணியும் இரு வேறு கணக்கு போட்டு உள்ளார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடிதான் வெற்றி பெறுவார் என்ற சூழல் இருப்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க அன்புமணி விரும்பி இருக்கிறார். ஆனால் டாக்டர் ராமதாசின் கணக்கு வேறுவிதமாக இருப்பதாக கட்சியினர் கூறுகிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற கோஷத்துடன் ஆட்சியை பிடிக்க தனித்து களம் கண்டது.
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க. அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே 2026-ல் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
எனவே டெல்லி அரசியலை பார்ப்பதைவிட தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் நாம் இருந்தால்தான் அந்த கட்சிக்கும் பலம். இது அவர்களுக்கும் தெரியும்.
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வலிமையான கூட்டணி அவசியம். எனவே சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு துணை முதல்வர் பதவி என்பதையும் இப்போதே பேசி வருவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு அதிகாரத்துக்கு வந்தால்தான் கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள்.
எனவே இந்த தேர்தல் நிபந்தனையுடன் அடுத்த தேர்தலில் துணை முதல்வர் பதவி என்ற தங்கள் திட்டத்தையும் அ.தி.மு.க.விடம் ரகசியமாக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முக்கியமல்ல. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில்தான் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அதற்காக துணை முதல்வர் பதவியை பா.ம.க.வுக்கு வழங்கவும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்வார் என்கிறார்கள் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu