பாமக வேட்பாளராக கடலூரில் களமிறங்கும் இயக்குநர் தங்கர் பச்சான்!
மருத்துவர் ராமதாஸுடன் தங்கர் பச்சான்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதனையடுத்து, மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு தருமபுரி, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி கடலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக, திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். கடலூர் மக்களவைத் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகிலுள்ள பத்திரக்கோட்டை என்ற கிராமத்தில் பச்சான் - லட்சுமி தம்பதியினருக்கு 1961 ஆம் ஆண்டு பிறந்தவர். தங்கராசு என்ற பெயருடன் தந்தையின் பெயரை சேர்த்துக்கொண்டு தங்கர் பச்சான் என மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், விஜித் பச்சான், அரவிந்த் பச்சான் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இவர் திரைப்படக் கல்லூரியில் ஒளி ஓவியம் கற்று திரைப்பட கலையை அறிந்தவர். நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார்.
தங்கர் பச்சான் மாலை சாரல் படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். அழகி படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இவர் தமிழ்த் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பள்ளிக்கூடம், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காதல் கோட்டை, கள்ளழகர், பாரதி, கண்ணுக்கு கண்ணாக ஜேம்ஸ் பாண்டு, குட்டி, பெரியார் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu