காரைக்குடி அருகே ப.சிதம்பரத்தை பேச விடாமல் விரட்டி அடித்த பெண்கள்
காரைக்குடி அருகே பிரச்சாரத்தின்போது ப. சிதம்பரத்தை பேச விடாமல் கேள்வி கேட்ட பெண்கள்.
வாக்கு கேட்டு வந்தால் முன்னாள் மத்திய அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரத்தை கல்லால் அடிப்போம் என்று காரைக்குடி அருகே உள்ள மித்ராவயல் கிராமத்து பெண் ஒருவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மித்ராவயல் கிராமத்துக்கு கார்த்தி சிதம்பரம் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
சிவகங்கை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது தந்தை ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மித்ராவயல் கிராமத்திற்கு நேற்று இரவு, ப.சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சேகரிக்க சென்றார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக கார்த்தி சிதம்பரம் மித்ராவயல் கிராமத்து பக்கமே வரவில்லையே" என் ஆவேசப்பட்ட பெண் ஒருவர், "ப.சிதம்பரம் பேசக் கூடாது" என கூறி எதிர்ப்புத் தெரிவித்தார். மித்ராவயல் கிராமத்துக்கு கார்த்தி சிதம்பரம் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "நான் பேசுவதற்கு உரிமை உள்ளது. அதேபோல் நீங்கள் பேசுவதற்கும் உரிமை உள்ளது. முதலில் நான் பேசி விடுகிறேன். பின்னர் நீங்கள் பேசுங்கள், கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் அமைதியாக இருங்கள்" என்று எடுத்துக்கூறினார்.
இருப்பினும் தொடர்ந்து அந்த பெண் பேசியதால், "அடுத்த தேர்தலில் இந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு கட்சியில் சீட் கொடுத்து நிற்க வைங்க" என ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்தக் கிராமத்தில் மது குடித்துவிட்டு 3 பேர் இறந்து போனார்கள். கூட்டத்தில் இருந்த சிலர் இதைச் சுட்டிக்காட்டி, "3 பேர் இறந்த சமயத்தில் எம்பி உள்ளிட்ட யாருமே வந்து எட்டிப்பார்க்கவில்லை. அதனால் யாரும் இங்கே ஓட்டு கேட்டு வரக்கூடாது. வந்தால் கல்லால் அடித்து விரட்டுவோம்" என்றார். ஓட்டுக்கேட்க வரக்கூடாது என்று தொடர்ந்து ப சிதம்பரத்தை பெண்கள் கேள்விகளால் துளைத்தபடி இருந்த காரணத்தால், ப சிதம்பரம் பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பி சென்றார்.
ப.சிதம்பரத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் கிராமத்துப் பெண் ஒருவர் மிகவும் ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu