தி.மு.க.மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை திடீர் உத்தரவு

தி.மு.க.மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை திடீர் உத்தரவு
X

அண்ணா அறிவாலாயம் (கோப்பு படம்).

தி.மு.க.மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் தலைமை திடீர் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமைக் கழகம் புது அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளது.

வரும் 8ஆம் தேதி அன்று மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்டச் செயலாளர்கள் தான் செய்திட வேண்டுமென தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதே 8ஆம் தேதி அன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சின்னம் அணிந்து திமுக எம்.பி.க்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இது தொடர்பான அறிவிப்பு வருமாறு;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, மாநில உரிமைகள் காத்திட ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 2024 பிப்ரவரி-8 (வியாழக்கிழமை) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் "கண்டன ஆர்ப்பாட்டத்தில்", கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதிராக தமது கண்டனக் குரலை எழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், தத்தமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென மாவட்டக் கழகச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business