நாடாளுமன்ற தேர்தல்: தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன்

நாடாளுமன்ற தேர்தல்: தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்.

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட டி.டி.வி. தினகரன் திட்டமிட்டு உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், வரும் லோக்சபா தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்துள்ளார்.

ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த போது 1991 முதல் 1996 வரையிலான கால கட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளர், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் என சர்வ சக்திவாய்ந்தவராக விளங்கியவர் டி.டி.வி .தினகரன். ஜெயலலிதாவின் இறுதி காலத்தில் அவருக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் சரியான கருத்தொற்றுமை இல்லை. அ.தி.மு.க.வில் அவர் ஜெயலலிதாவால் ஓரங்கப்பட்டே இருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. பன்னீர் செல்வம் அணி, பழனிசாமி அணி இரண்டாக பிளவு படுவதற்கு முன்பாகவே டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தனி கட்சி தொடங்கி அதன் பொதுச்செயலாளராக உள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அவரது ஆட்சி ஆறுமாதத்தில் கவிழ்ந்துவிடும், தீபாவளிக்குள் கரைந்து விடும், பொங்கல் வரை தாங்காது என்றெல்லாம் ஆரூடம் கூறி வந்தார். ஆனால் அவர் ஆரூடம் கூறியது எதுவும் பலிக்கவில்லை.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனித்து களம் கண்டார். தென் மாவட்டங்களில் அவர் நிறுத்திய வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் சுமார் 25 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு பழனிசாமி முதல்வராவதை தடுத்தனர்.

இந்த நிலையில் தான் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி உள்ளது.அ.தி.மு.க .கூட்டணியில் இருந்து விலகியதால் பா.ஜ.க. பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், வலுவான கூட்டணியில் இணையத் திட்டமிட்டு வருகிறார். ஆனால், இதுவரை யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் அவர் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். உடனும் இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறார் தினகரன்.

இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாக கூறுவது யூக அடிப்படையிலான தகவல். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லலை.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருந்தார் டி.டி.வி. தினகரன். இந்நிலையில் தான், அவர் லோக்சபா தேர்தலில் தஞ்சையில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்காக பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத் தொகுதி வாரியாக அ.ம.மு.க. பொறுப்பாளர்களையும் நியமனம் செய்துள்ளார் டி.டி.வி. தினகரன்.

டி.டி.வி. தினகரன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை நேரடியாக இரண்டு முறை சந்தித்து சால்வை அணிவித்து உள்ளார். அ.தி.மு.க. பாரதீய ஜனதாவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுள்ள சூழலில் அ.தி.மு.க.விற்கு பாடம் கற்பிக்க பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக அவர்கள் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த பா.ம.க, தே.மு.தி.க, மற்றும் புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி ஆகியவற்றை சேர்த்து கொண்டு களம் இறங்கும் மெகா திட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story