திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றது வெளியூர் சென்டிமெண்ட்

திருச்சி நாடாளுமன்ற  தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றது வெளியூர் சென்டிமெண்ட்

துரை வைகோ.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெளியூர் சென்டிமெண்ட் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வைகோ மகன் துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளார். இதன் மூலம் திருச்சி தொகுதி மக்களின் சென்டிமென்ட் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக ம.தி.மு.க.வின் பொது செயலாளர் வைகோவின் மகனும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்பட மொத்தம் 35 பேர் களமிறங்கினார்கள்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே அனைத்து சுற்றுகளிலும் துரை வைகோ முன்னிலை பெற்று வந்தார். மாலை 4 மணி நிலவரப்படி துரை வைகோ அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட சுமார் 3 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். இதன் மூலம் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலான தேர்தல்களில் திருச்சிக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர்க்காரர்கள் தான் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள். இது அனந்தன் நம்பியார் காலத்தில் தொடங்கி எம். கல்யாணசுந்தரம் காலம் மற்றும் ரங்கராஜன் குமாரமங்கலம் எல்.கணேசன், திருநாவுக்கரசர் என தொடர்ந்தது தற்போதைய தேர்தல் வரை அது நீடிக்கிறது.

துரை வைகோ திருச்சிக்கு சம்பந்தம் இல்லாதவர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருச்சி ம.தி.மு.க.வினர் திருச்சி பாதுகாப்பான தொகுதி இங்கு வந்து வெற்றி வாகை சூடுங்கள் என அவரை அழைத்து வந்து நிறுத்தினார்கள்.

ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் துரை வைகோ பின்னர் தனது தந்தையின் கட்டளையை ஏற்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்கினார். ஆரம்பத்தில் திமுகவுடன் அவர்களுக்கு சில முட்டல், மோதல்கள் இருந்தன.ஆனால் அதையெல்லாம் சமாளித்து உறுதியாக காலை ஊன்றினார் துரை வைகோ. இப்போது வெற்றி வாகை சூடி உள்ளார். அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி எப்போதுமே வெளியூர் காரர்களுக்கு தான் என்ற ஒரு செண்டிமெண்ட் மீண்டும் வெற்றி பெற்று உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story