அதிமுகவில் சேர்க்கப்படுகிறாரா சசிகலா? ஓ.பி.எஸ் பேட்டியால் பரபரப்பு

அதிமுகவில் சேர்க்கப்படுகிறாரா சசிகலா?  ஓ.பி.எஸ் பேட்டியால் பரபரப்பு
X

கோப்பு படம் 

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று, ஓ.பி.எஸ். கூறி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறைக்கு சென்ற சசிகலா, விடுதலையான பின்னர், அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். எனினும், அடிக்கடி அதிமுக தொண்டர்களை சந்தித்தார். செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி, அதிமுவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

இதனிடையே, அண்மையில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது, ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு, அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது. இது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன், அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று இ.பி.எஸ்., ஜெயகுமார் உள்ளிட்டோர் உறுதிபட தெரிவித்தனர். மேலும், சசிகலாவுக்கு எதிராக, காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மதுரையில் இந்த விவகாரம் குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசி இருப்பது பரபரப்பையும், அதிமுகவில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், "சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்" என்றார். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்; அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்று கூறிய ஓ.பி.எஸ்., அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்றார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று, எடப்பாடியார் பேசி வரும் நிலையில், ஓ.பி.எஸ்-ன் இந்த கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

'இதற்காகத்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறோம்' என்று ஒரு தரப்பு அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!