ஓபிஎஸ் அ.தி.மு.க. கொடி சின்னம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு ஒத்தி வைப்பு
அ.தி.மு.க. கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அ.தி.மு.க. கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால கோரிக்கையை தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர்.
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தான் கட்சியில் இருந்து சிலரை தான் நீக்கியதாகவும் அதற்கு தனக்கு உரிமை உள்ளதாகவும் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு பின்னால் ஏராளமான தொண்டர்கள் உள்ளதால் அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் தனக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் ஒபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காக கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென்றே விரும்புவதாகவும், அதற்கு தொண்டர்களை சந்திப்பதற்கான சுதந்திரம் தனக்கு வேண்டுமெனவும் பன்னீர்செல்வம் சார்பில் வாதிடப்பட்டது. மேலும், கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த தங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்துக்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் பதிலளித்தார். இடைக்கால கோரிக்கையை நிராகரிக்கும் போது மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறை தான் என தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் தன்னை அழைத்துக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை தான் எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் அழைத்துக்கொள்ளட்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu