டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் அக்.6-ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி.
காவிரி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்)பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தின் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் அக்டோபர் ஆறாம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமல் குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காததற்கு தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.
மேலும் குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட இருக்கிறது. இதோடு உச்சநீதிமன்ற ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மேலும் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu